“திமுக ஆட்சியில் யானைகள் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாக,” உலக யானைகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எழில் மிகுந்த வளமான காடுகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது யானைகள் தான். யானைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 2012-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஆக.12-ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம், ஆசிய, ஆப்ரிக்க யானைகளின் நிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை உலகளவில் முன்னெடுக்கவும் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகள் பாதுகாப்புக்கான பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள யானைகள் வாழ்விடங்களில் 3,063-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு அறிக்கையை சில தினங்கள் முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார்.
இந்நிலையில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
சூழலியல் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுவதும் பல்வேறு பெயர்களால் யானை குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.
பல்லுயிர் காக்கும் நம் அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரியை செய்தியை உலக யானைகள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.