எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இன்னமும் விவாதப் பொருளாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சமூக நீதி ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்க, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் தாம் எதிர்க்கிறேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார் ரவிக்குமார் எம்பி. இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் ரவிக்குமார் எம்பி பதிவிட்டுள்ளதாவது:-
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரிஜினல் வழக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து அப்பீல் செய்யப்பட்டது. இங்கே உள்ள அருந்ததியினர் சமூக மக்களை ஒத்தவர்கள்தான் பஞ்சாப்பில் உள்ள சமார் சமூகத்தினர். பஞ்சாப் மாநில அரசு செய்த சப் கேட்டகரைசேஷன் எஸ்சி மக்களைப் பிரிக்கிறது எனக் கூறி அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ‘சமார் மகா சபை’ என்ற அமைப்புதான். இந்த உண்மை தெரிந்துதான் இங்குள்ள அருந்ததியினர் அமைப்புகள் பேசுகிறார்களா? அல்லது தெரியாமல் பேசுகிறார்களா?.
பஞ்சாபில் எஸ்சி பட்டியலில் 39 சாதிகள் உள்ளன. 2011 சென்சஸ் படி மொத்த மக்கள் தொகையில் 31.9 % எஸ்.சி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டில் அந்த 25% இட ஒதுக்கீட்டை தலா 12.5% என இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை மஜிபி சீக்கியர்களுக்கும் வால்மீகிகளுக்கும் பஞ்சாப் மாநில அரசு கொடுத்தது. மீதமுள்ள 37 சாதிகளுக்கு எஞ்சிய 12.5% கொடுக்கப்பட்டது. அந்த 37 சாதிகளில் சமார் சாதியும் ஒன்று. மஜிபி சீக்கியர்கள்தான் பஞ்சாப்பில் உள்ள எஸ்சி சாதிகளில் அதிக மக்கள்தொகை கொண்ட சாதியினர் ஆவர். ( 22,20,945).அதற்கு அடுத்து எண்ணிக்கை பலம் கொண்ட சாதி சமார் ( 18,41,416) ஆகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்த எஸ்சி வகுப்புக்கு ஆதரவான இந்த நடவடிக்கையை எஸ்.சி பட்டியலில் உள்ள சமார் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அப்போதே அதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினார்கள். வழக்குகளைத் தொடுத்தார்கள். இதில் முன்னணியில் நின்றது சமார் சமூகத்தினர்தான்.
2004 ஆம் ஆண்டு சின்னையா வழக்கில் எஸ்சி பட்டியலை மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசு இயற்றியிருந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை ரத்து.செய்தது. அதன் பின்னர் அங்கே இருந்த மாநில அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி மீண்டும் அந்த உள் ஒதுக்கீட்டை வழங்கியது. அதுவும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தது. அதை ‘சமார் மகா சபா’ எதிர்த்தது. “இட ஒதுக்கீட்டுக்குள்ளேயே உள் ஒதுக்கீடு வழங்குவது பட்டியல் சமூக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அரசியல்வாதிகளின் சதி” என்று அந்த அமைப்பு வாதிட்டது. அந்த வழக்கில் தான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமார் மகா சபாவுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை சமார் மகா சபா ஏற்றுக்கொள்ளவில்லை, எதிர்க்கிறது.
இந்த உண்மையை தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர் சமூகத் தலைவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எஸ் சி சமூகத்தின் நலன்களை இந்திய அளவில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் எஸ் சி பட்டியலில் மாற்றம் செய்யும் அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் அளித்தார். அம்பேத்கரின் அந்த நோக்கத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல், தங்களுடைய நலன் எது ? அதற்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்? என்பதை உணராமல் அருந்ததியர் சமூகத் தலைவர்கள் விசிகவை அவதூறு செய்வதை என்னவென்று சொல்வது? 2009 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்த கட்சி விசிக! திருமாவளவனும் நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். அன்று விசிக எதிர்த்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்போதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சொன்னதை வரவேற்ற கட்சி விசிக!
இந்திய அளவில் சமார், ஜாதவ் என அருந்ததியர் சமூகத்தை ஒத்த மக்கள் இந்தத் தீர்ப்பை எதிர்க்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். எஸ்சி மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக எஸ்சி மக்களைப் பிரித்து சிதறடிக்கப் பார்க்கிறது. சப் கேட்டகரைசேஷன் என்ற பெயரில் கிரீமி லேயர் வரம்பு எஸ்சி மக்களுக்கும் பொருந்தும் என்று ஆக்கியிருக்கிறது. இந்த வழக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 341 இன் படி எஸ்சி பட்டியலில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா என்ற ஒற்றை வினாவைத் தீர்மானிப்பதற்கானது. அதற்குத் தொடர்பே இல்லாத கிரீமி லேயர் குறித்து இந்தத் தீர்ப்பில் 82 முறை பேசப்பட்டுள்ளது.
7 நீதிபதிகளில் 4 பேர் கிரீமி லேயர் எஸ்சி மக்களுக்கும் பொருந்தும், கிரீமி லேயர் பிரிவினரை இட ஒதுக்கீட்டுத் தகுதியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். அது ஏன்? கிரீமி லேயர் என்பதை ஓபிசிக்கு எப்படி தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயைத் தாண்டக்கூடாது. EWS க்கு உள்ள அதே வருமான வரம்புதான். ஆக இப்போது உச்சநீதிமன்றத்தின் அளவுகோல்படி பிராமணருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் ஒரே அளவுகோல்தான். அதை சாத்தியமாக்கியதுதான் கிரீமி லேயர். இப்போது எஸ்சி, எஸ்டிக்கும் கிரீமி லேயர் என்ற தீர்ப்பளித்துவிட்டார்கள் நீதிமான்கள். அப்புறமென்ன இனிமேல் பிராமணர், சூத்திரர், நாலு வருணத்தில் அடங்காத எஸ்சி, எஸ்டி எல்லோருக்கும் ஒரே அளவுகோல்தான்! என்னவொரு சமத்துவ சிந்தனை!!
இந்த வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வ வாதத்திலும் எஸ்சி மக்களுக்கு கிரீமி லேயர் பொருந்துமா என்பதைப்பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அதனால்தான் சொல்கிறேன் எஸ்சி இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதற்கான துவக்கம்தான் இந்தத் தீர்ப்பு. என்னையோ, எமது தலைவரையோ அவதூறு செய்வதன்மூலம் எங்களது கவனத்தைத் திசைத்திருப்பி பாஜகவின் துரோகத்தை மூடி மறைக்கப் பார்க்கிறவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள். இவ்வாறு ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.