எனது தந்தை குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டதை பார்த்து மகளாக மகிழ்கிறேன் என முன்னாள் ஆளுநரும், பாஜக பிரமுகருமான தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இன்று சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியதற்கு அவரது மகளும் பாஜக பிரமுகருமான தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “எம் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணின் பெருமைக்கும் உழைத்த எனது தந்தையின் வாழ்நாள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் போற்றப்படுவதைக் கண்டு மகளாக மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என தமிழிசை தெரிவித்துள்ளார்.