விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் முறைகேடுகள் நடந்தாக புகார்: ரோஜாவுக்கு சிக்கல்!

ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ரோஜா. இவர் கடந்தாண்டு முதல்வர் கோப்பை ஆடுதாம் ஆந்திரா என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். அதில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த ஆந்திர சிஐடி உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த 2019- 2024 வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசில் கடைசி 2 ஆண்டுகள் நடிகை ரோஜா சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் அப்போது அவர் ஆந்திராவில் முதல்வர் கோப்பை ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். இந்த போட்டிகளுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த ஆடுதாம் ஆந்திரா போட்டிகளில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் தேசிய கபடி வீரரும், ஆத்யா-பாட்யா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.டி.பிரசாத் புகார் அளித்திருந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.கே.ரோஜா, தர்மனா கிருஷ்ணதாஸ் (ஆந்திரப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர்) ஆகியோர் மீதான ஊழல் புகாரில் ஆந்திர மாநில சிஐடி இப்போது விசாரணையைத் தொடங்கியது.

முதல்வர் கோப்பை ஆடுதாம் ஆந்திரா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருவரும் பல முறைகேடுகள் செய்ததாகவும், நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரசாத் தனது புகாரில் கூறியிருந்தார். அது தொடர்பாகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு அரசும் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியிருந்தது. அதாவது வெறும் 40 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட ஆடுதாம் ஆந்திராவுக்கு சுமார் ரூ.120 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்திருந்தார். இப்போது சிஐடி இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் ரோஜா உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

முந்தைய ஜெகன்மோகன் அரசு ஆடுதாம் ஆந்திரா என்ற 47 நாள் விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்தது. இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருக்க வேண்டும், திறமையான இளைஞர்களை அடையாளம் காண்பது ஆகியவற்றுக்காக இந்த ஆடுதாம் ஆந்திரா போட்டிகளை நடத்துவதாக ஜெகன் அரசு அறிவித்து இருந்தது. இந்த போட்டிகளைக் கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் தொடங்கி வைத்தார். கடந்த பிப்ரவரி 10ம் தேதி வரை இந்த போட்டிகள் ஆந்திரா முழுக்க உள்ள 9,000 பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றன. லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடந்தது. இதில் ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த ஜெகன்மோகன் அரசு மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. முந்தைய தேர்தலில் 151 இடங்களில் வென்றிருந்த ஜெகன் கட்சிக்கு இந்த முறை வெறும் 11 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றி சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்தது. அங்கே ஆட்சி மாற்றம் நடந்தது முதலே முந்தைய ஆட்சியில் எழுந்த ஊழல் புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.