டெல்லி முதல்வர் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது: சுனிதா கெஜ்ரிவால்!

முதல்வர் இல்லத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இன்று முதல்வர் இல்லத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி நிறுத்த முடியும்?” என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஆதிஷி தனது பதிவில், “இந்த சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத்தர நூற்றுக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் தடியடியை எதிர்கொண்டு, சிறைக்குச் சென்று, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவில் ஒரு நாள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பொய் வழக்கில் மாதக்கணக்கில் சிறையில் அடைப்பார்கள் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். நமது இறுதிமூச்சு உள்ளவரை சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட இந்த சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.