மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்: நிர்பயா தாய்!

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாய் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மம்தாவை கடுமையாக விமர்சித்த அவர், நிலைமையைக் கையாள தவறி மம்தா பதவி விலக வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த விவகாரத்தில் கொல்கத்தா போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாய் கொல்கத்தா மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து மேற்கு வங்கம் முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், அந்த நிலைமையைக் கையாள மம்தா தவறிவிட்டதாகக் கூறிய அவர், மம்தா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் மேலும் கூறியதாவது:-

மம்தா பானர்ஜி போராட்டத்தை எல்லாம் நடத்தி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மம்தா பானர்ஜி பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்கிறார். அவரும் ஒரு பெண் தான். அவரிடம் அதிகாரம் இருக்கிறது. அவர் தான் மேற்கு வங்க முதல்வராக இருக்கிறார்.. அவர் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார். நிலைமையைச் சரியாகக் கையாளத் தவறியதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் விரைவான தண்டனை வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும். இதைச் செய்யாத வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. இந்த நாட்டில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.