சென்னையில் கடலோர காவல்படையின் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னையில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். மேலும், சென்னையில் மண்டல கடல் மாசு நிவாரண மையம், புதுச்சேரியில் கடலோர காவல்படை விமான வளாகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார். இப்புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கடலில் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவர்களுக்கான மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும். இந்த அதிநவீன வசதி கடலில் உயிர்களை பாதுகாப்பதற்கும், முக்கியமான சூழ்நிலைகளில் விரைவான நடவடிக்கையை இந்திய கடலோர காவல்படை மேற்கொள்வதற்கும் வழி வகுக்கும்.

சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மண்டல கடல் மாசு மீட்பு மையம், கடல் மாசு மேலாண்மையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது. இந்த பிராந்தியத்தில் முதன்முறையாக, கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், குறிப்பாக எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவுகளை ஒருங்கிணைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.

புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமானப்படை வளாகம், புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடலோரத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த வளாகத்தில் சேத்தக் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் படைப் பிரிவுகள் அமர்த்தப்பட்டு, வான்வழி கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை திறன்களை மேம்படுத்தும்.

இந்நிகழ்ச்சியில், இந்தியக் கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ஐ.ஜி.டோனி மைக்கேல், தக் ஷிண பாரத ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பிர் சிங் பிரார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.