ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு!

போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை 19ம் தேதி (இன்று) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை 19ம் தேதி (இன்று) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும்.

இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இதனால் மருத்துவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களை கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். மேலும், உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறோம். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஒத்துழைப்பையும், உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.