தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக வெ இறையன்பு இருந்தார். இவர் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் தமிழகத்தின் 49 வது தலைமை செயலாளராக செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக உள்ள நிலையில் அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ஏனென்றால் தலைமை செயலாளர் பதவியில் உள்ளவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். அதேபோல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பும் தலைவலி மிக்கது. இதனால் தான் சிவ்தாஸ் மீனா அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் பேசும் பொருளாகி உள்ளது.
இந்நிலையில் தான் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு உள்ளிட்ட பணிகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தான் செயல்படுத்தி வருகிறது. இதற்கு என்று தமிழக அரசு சார்பில் தனியாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தான் நியமனம் செய்யப்படுவர். அதன்படி இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முடிவடைந்தது. தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு காலியாக இருந்த நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஓய்வு பெறாத நிலையில் தற்போது தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிவ்தாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளார். அதேவேளையில் சிவ்தாஸ் மீனாவுக்கு முதல்வர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் உள்ளது. ஸ்டாலினின் குட்புக்கில் சிவ்தாஸ் மீனா உள்ளாராம். இதனால் சிவ்தாஸ் மீனா ஓய்வு பெற்றாலும் கூட அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்து தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.