தமிழகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: கீதாஜீவன் விளக்கம்!

பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு, விசாரணை, கைது என தீவிரம் காட்டப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாவட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் பாப்பாநாட்டில் இளம்பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இதில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

எங்கள் துறை சார்ந்த உதவி எண்ணிற்கு புகார் வந்ததும் மாவட்ட ஆட்சியர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இணைந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவிகள் ஓரிடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுடன் பெண் ஆசிரியை உடனிருக்க வேண்டும். கிருஷ்ணகிரி சம்பவத்தில் மாணவிகள் மட்டும் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம். இந்த சம்பவங்களை நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. 1098 என்ற உதவி எண்ணிற்கு உடனடியாக அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். கிருஷ்ணகிரி சம்பவத்தில் மாணவிகள் சம்பவம் நடந்த போதே புகார் அளிக்க முடியாத சூழல் இருந்துள்ளது. வீட்டிற்கு வந்த பின்னர் தான் சொல்ல முடிந்துள்ளது. கடந்த காலங்களை போல் அல்லாமல் 1098 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மாணவிகளோ அல்லது பெற்றோரோ அல்லது அவர்களின் உறவினர்களோ எங்களுக்கு புகார் அளிக்கலாம். விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.