திருச்சி எஸ்பி வருண்குமார் நோட்டீஸுக்கு சீமான் விளக்கம்!

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீமானுக்கு வருண்குமார் தரப்பு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், அதற்கு 16 பக்க விளக்கத்தைச் சீமான் தனது வழக்கறிஞர் மூலம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதற்காக சில காலம் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து சீமான் பேசியதாகச் சொல்லிப் பல ஆடியோக்கள் வெளியானது. அப்போது இந்த ஆடியோக்களை திருச்சி எஸ்பி வருண்குமார் தான் திட்டமிட்டு வெளியிடுவதாகச் சாட்டை துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். நாம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் செயல்படுவதாகப் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் வருண் குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்புவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், தனது வழக்கறிஞர் மூலமாகச் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது சீமான் தனது வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் மூலம் 16 பக்க விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர், “திருச்சி எஸ்பி வருண் குமாரின் சாதி என்னவென்றே எனக்குத் தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரியாது. இளம் அதிகாரியான வருண் குமாருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவருக்குப் பதவி உயர்வுகள் மூலம் டிஜிபி ஆகும் அளவுக்குத் தகுதி இருக்கிறது.அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவன். போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை இருக்க வேண்டும் உள்பட போலீசாரின் பல உரிமைகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.