“கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செம்மொழி பூங்கா முதல் கட்ட பணிகள் மே 25-ம் தேதிக்குள் முடியும்” என சட்டப்பேரவை உறுதி மொழிக்குழு தலைவர், எம்எல்ஏ வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினர், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து இன்று (ஆக.21) ஆய்வு மேற்கொண்டனர். காலை கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பணிகள் குறித்து குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கோவை காந்திபுரத்தில் 125 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படவுள்ளது. தற்போது சிறைச்சாலை செயல்படும் காரணத்தால், இடமாற்றம் செய்த அந்த நிலத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் 2025-ம் ஆண்டு மே 25-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காந்திபுரத்தை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் மேற்கு புறவழிச் சாலை பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறோம். அதை தொடர்ந்து மாலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.