மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம்: உயர்நீதிமன்றம்!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சி தலைவர்கள் மூலமாக 100 நாள் வேலை திட்டத்திற்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், தேனி பழையகோட்டை கிராம ஊராட்சியில் 2020-21ம் ஆண்டுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஊராட்சி மன்றத் தலைவர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார். ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலரும், அவருடன் இணைந்து பணியாளர்களின் வருகை பதிவேடை மறைத்து விட்டார். வேலை பார்க்காத பலரது பெயர்களை குறிப்பிட்டு சம்பளம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, தேனி மாவட்டம் பழையகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பழையகோட்டை ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. ஏனெனில் காந்தி பெயரை வைத்துக்கொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் செய்கிறார்கள். இத்திட்டத்தில் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது” என கருத்து தெரிவித்து, இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட ஊரக மேம்பாட்டு துறையின் திட்ட இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 10 தேதிக்கு ஒத்திவைத்தனர்.