ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலமாக ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ.30 லட்சம் வசூலித்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி ஆவினில் அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ரவீந்திரன் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதாலும், அவரது அரசியல் செல்வாக்கு காரணமாகவும் அவருக்கு எதிராக விருதுநகர் போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அறிவுறுத்த வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.