பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில், 68 வயதாகும் மாயாவதி கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய செயற்குழு, தேசிய அளவிலான மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதிநிதிகளின் சிறப்புக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக மாயாவதி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய மாயாவதி கூறியதாவது:-
பிஎஸ்பி இயக்கத்தின் மூலம் தலித், ஆதிவாசி மற்றும் ஓபிசி சமூகங்களில் பிறந்தவர்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். பின் தங்கிய மக்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்துக்கான அம்பேத்கரின் இந்த இயக்கம் இப்போது முன்னேறி வருகிறது. அதன் இலக்கில் இருந்து தவறாக வழிநடத்த முடியாத அளவுக்கு வலுவாக மாறியுள்ளது.
தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சி ஏமாற்றமடையவில்லை. சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் குரலாக பிஎஸ்பி இருக்கும். எளிய மக்களின் முன்னேற்றத்தையும் அவர்கள் செழிப்படையச் செய்வதையும் பிஎஸ்பி இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கில் கட்சி உறுதியாக உள்ளது.
கடந்த காலத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் இருந்ததைப் போலவே, தற்போது பாஜக எதிர்ப்பு அரசியல் வலுத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும் தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் உண்மையான நலம் விரும்பிகள் அல்ல. எளிய மக்கள் பற்றிய அவர்களின் சிந்தனை குறுகியதாகவும், சாதிவெறியாக, மதவெறி கொண்டதாகவும் இருப்பதே இதற்குக் காரணம். நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இந்த இரு கட்சிகளின் ஆட்சியிலும், இவர்களின் கூட்டணி ஆட்சியிலும் எளிய மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு இதுவே முக்கிய காரணம். இவ்வாறு மாயாவதி கூறினார்.