அண்ணாமலையின் நிலைமை 7 நாள்கள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி போன்றது: ஜெயக்குமார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது:-

அண்ணாமலையின் தகுதி என்ன? மூன்று ஆண்டுகள்தான் அரசியலில் இருந்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கிளைச் செயலாளராக தொடங்கி அமைச்சர், முதல்வரானவர். கொடி பிடிக்கும் தொண்டன்கூட கொடி கட்டிய அரசு காரில் வர முடியும் என்றால் அதிமுகவில்தான் முடியும்.

ஆனால், அண்ணாமலையின் நிலைமை 7 நாள்கள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி போன்றது. இந்த அளவுக்குதான் அவருடைய நிலைமை. இதனை மறந்துவிட்டு பாரம்பரிய கட்சியும் 2026-இல் ஆட்சிக்கு வரும் மாபெரும் கட்சியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளதா?

கற்பனையில் மிதந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார் அண்ணாமலை. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு திமுக இதுவரை வாய்த்திறக்கவே இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது, அதிமுகவை தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவார்கள். இதுதான் வரலாறு. ஆட்சியைப் பிடிப்பது பாஜகவுக்கு பகல் கனவு போன்றது. கோட்டை பக்கம்கூட வரமுடியாது, ஒரு எம்எல்ஏ சீட் கூட அடுத்த முறை வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் அண்ணாமலை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை என்றும், மைக்கை பார்த்தால் வியாதி போல பேட்டிக் கொடுக்கத் தொடங்கிவிடுவார் என்றும் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள்? டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள், எந்த எம்எல்ஏவுக்கு மாதம் மாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான் தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.