டீன் நியமனம் செய்யப்படாத போது புதிய மருத்துவக் கல்லூரி திறப்பது ஏன்?: உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிரந்தர டீன் நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் மதுரை உட்பட 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தமிழகத்தின் 2-வது பெரிய அரசு மருத்துவமனை. நாள்தோறும் இங்கு 9 ஆயிரம் பேர் வெளிநேயாளிகளாக சிகிச்சை பெறவருகின்றனர். உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேர் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் டீன் பொறுப்பு முக்கியமானது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்றார். தற்போது மூத்த மருத்துவ பேராசிரியர் பொறுப்பு டீனாக பணிபுரிகிறார். தமிழகத்தில் மதுரை, கரூர், திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிரந்தர டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணிகளுக்கு உறுதியான முடிவெடுக்க நிரந்தர டீனால்தான் முடியும். பொறுப்பு டீனால் உறுதியான முடிவெடுக்க முடியாது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நிர்வாக பணி, கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை உட்பட அரசு மருத்துவக்கல்லூரி டீன் பணியிடங்களில் நிரந்தர டீன் நியமிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ”மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கிறீர்கள். ஆனால் டீன் நியமிப்பதில்லை. டீன் நியமனம் செய்யப்படாத போது புதிய மருத்துவக் கல்லூரி திறப்பது ஏன்? மனு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப்.3க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.