மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் நிதி நிறுவனம் மூலம் பணம் வசூலித்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநராக தேவநாதன் யாதவ் இருந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிகமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த வேளையில் 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் கைதாகி உள்ள ஜாமீன் கோரி தேவநாதன் உட்பட 3 பேர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தனர்.

காவல்துறை தரப்பில் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளவர்களில் முக்கியமானவராக தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து தேவநாதன் யாதவ் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும் அவர் வின் டிவி சேனலையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.