“மத்திய அரசு தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க நினைக்கிறது” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி 166-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு முதல் மத்திய அரசு கல்விக்காக தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் கல்வியில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான். சிறந்த கல்வி தமிழகத்தில் உள்ளது. அதற்கு இடையூறு கொடுக்கும் விதமாக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளனர். அது சமூக நீதிக்கும். சமானிய மக்களுக்கும் விரோதமானது எனபதனால் நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுக்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தை ஒரு மொழி பாடமாக படிக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. மிகப்பெரிய வரலாறும் 7 நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள தமிழை அனைவரும் படிக்கச் சொன்னால் சரி எனலாம். ஆனால் 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதால் நாம் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க பார்க்கிறது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 10லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தில் இன்னும் பல கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். ரஜினிகாந்த் வயதானவர் என்றாலும் இளமையாக நடித்தால்தான் மக்கள் ஏற்று கொள்வார்கள். அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். வயதாக வயதாக பழுத்த பழம்போல், கருணாநிதி போன்று அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.