நாடு முழுவதும் ரூ.28,600 கோடி முதலீட்டில் 12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் தனியார் எஃப்.எம். வானொலி சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் தொழில் நகரங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், எஃப்.எம். வானொலி சேவை விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, நாட்டின் 10 மாநிலங்களில் தேசிய தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள், 30 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ‘‘நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் விதமாகவும் மத்திய அரசு 12 ஸ்மார்ட் தொழில் நகரங்களை அமைக்க உள்ளது. இதன்மூலம் ரூ.1.52 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
ஆந்திராவில் கோபர்தி மற்றும் ஓரவகல், தெலங்கானாவில் ஷஹீராபாத், கேரளாவில் பாலக்காடு, மகாராஷ்டிராவில் திஹி, ராஜஸ்தானில் ஜோத்பூர் – பாலி, பிகாரில் கயா, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா, பிரக்யாராஜ், உத்தராகண்டில் குர்பியா உட்பட 12 நகரங்களில் ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மத்திய பிரதேசம், ஆந்திராவில் தலா 2 ஸ்மார்ட் தொழில் நகரங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
‘ப்ளக் அண்ட் ப்ளே’ (Plug n Play), ‘வாக் டு வொர்க்’ (Walk to Work) அடிப்படையில் உலக தரத்தில் இந்த ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்கப்படும். ‘கதி சக்தி’ திட்டத்தோடு இணைந்து இந்த நகரங்களும் மேம்பட்ட லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ப்ளக் அண்ட் ப்ளே’ என்பது நிறுவனங்கள் எளிதாகவும் உடனடியாகவும் தொழில் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பையும், தேவையான வசதிகளையும் கொண்டிருப்பதாகும். ‘வாக் டு வொர்க்’ என்பது தொழில் நிறுவனங்களுக்கு அருகிலேயே ஊழியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை அமைப்பதாகும். இந்த ஸ்மார்ட் நகரங்கள்மூலம், 2030-க்குள் இந்தியாவின் ஏற்றுமதியை 2 டிரில்லியன் டாலராக உயர்த்தஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.6,456 கோடி மதிப்பில் 3 ரயில்வே திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. ஜாம்ஷெட்பூர் – புருலியா – அசன்சோல் இடையே ரூ.2,170 கோடி செலவில் 121 கி.மீ. ரயில் பாதை அமைக்கவும், சர்தேகா – பால்முண்டா இடையே புதிய இரட்டைப் பாதை, பர்கா – நவப்ராரா இடையே புதிய பாதை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 ரயில்வே திட்டங்கள் மூலம் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் போக்குவரத்து மேம்படும். பயண நேரம், சரக்கு போக்குவரத்துக்கான செலவு குறையும். வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை விரிவுபடுத்தவும், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர் மின்சக்தி திட்டங்களை மேற்கொள்ளும் மாநிலங் களுக்கு ரூ.4,136 கோடி பங்கு உதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) சேவையை 234 நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3-ம் கட்ட ஏலத்தின்கீழ் ரூ.785 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை வானொலி அலைவரிசை ஏலம் மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி நீங்கலாக மொத்த வருவாயில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் 4% ஆக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், தாய்மொழியில் உள்ளூர் விஷயங்கள் முக்கியத்துவம் பெறும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.