தமிழகத்தில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு வல்லுநர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என சொல்லி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான 3 வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த அடிப்படையில் வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எந்த விவரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி தான் என்றாலும் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படலாம். மாதம் ரூ.1.50 லட்சம் என்பது தமிழக அரசின் துணைச் செயலாளர் நிலையிலான பணிக்கான ஊதியம் ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தை இட ஒதுக்கீடு இல்லாமல், போட்டித் தேர்வு இல்லாமல் நிரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொல்லைப்புற வழியாக அரசு பணியை வழங்குவதற்காகவே இந்த ஆள் தேர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.
மத்திய அரசில் இணைச் செயலாளர், இயக்குனர் நிலையிலான பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 45 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இட ஒதுக்கீட்டு விதிகளை புறக்கணித்து விட்டு வெளியிடப்பட்ட இந்த ஆள் தேர்வு அறிவிக்கையை பாமக உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் இந்த ஆள் தேர்வு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
இட ஒதுக்கீடு இல்லாத மத்திய அரசின் நேரடி ஆள் தேர்வு முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தது சரியான நிலைப்பாடு. பாமகவின் அதே நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால், மத்திய அரசு செய்ததை விட மிக மோசமான சமூக அநீதியை, இட ஒதுக்கீடு இல்லாமல், தாங்கள் விரும்பியவர்களை தேர்வு செய்யும் வகையில் ஆள் தேர்வு அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டது எந்த வகையில் நியாயம்? இந்த சமூக அநீதியை முதலமைச்சர் ஆதரிக்கிறாரா அல்லது தமக்கு தெரியாமல் நிகழ்ந்து விட்டது என்று தட்டிக்கழிக்கப் போகிறாரா?
ஓராண்டுக்கான ஒப்பந்த பணி தான் என்று கூறி, இந்த சமூக நீதிப் படுகொலையை தமிழக அரசு நியாயப்படுத்த முனையக் கூடாது. ஒப்பந்த பணிகளாக இருந்தாலும், தற்காலிக பணிகளாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து இந்தக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல துறைகளில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் ஆலோசகர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள் என்ற பெயரில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய பலர் அதிக ஊதியத்தில் நியமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
சமூக நீதி காக்கும் அரசு என்று கூறிக் கொண்டு , இட ஒதுக்கீட்டை இந்த அளவுக்கு திமுக அரசு படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுநர்கள் நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடந்த காலங்களில் இதேபோல், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுவதுடன், அந்த நியமனங்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.