கர்நாடக அரசைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ரூ. 100 கோடி வழங்குவதாகக் கூறுகின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
பாஜக எங்களின் அரசைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி வழங்குவதாக எம்எல்ஏ ரவிக்குமார் கௌடா என்னிடம் தெரிவித்தார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது ’ஆபரேஷன் தாமரை’ மூலம் மட்டுமே. அவர்கள் மக்களின் ஆதரவால் என்றும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. கடந்த 2008, 2019 ஆண்டுகளில் அவர்கள் ‘ஆபரேஷன் தாமரை’ மூலமாக பின்வாசல் வழியாகவே ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதேபோலவே இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர்.
காங்கிரஸிடம் 136 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்களது அரசை எளிதாகக் கலைத்துவிட முடியாது. குறைந்தது 60 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தால் மட்டுமே பாஜக ஆட்சியமைக்க முடியும். ஆனால், பணத்தால் எங்களில் ஒருவரைக் கூட பாஜகவால் வாங்கமுடியாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.