தேவநாதன் யாதவின் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை போலீசார் காவலில் எடுத்து தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவநாதன் அளித்த தகவலின்படி நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிரந்தர வைப்பு நிதியாக ரூபாய் 525 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் கொடுக்காமல் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 12 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், இயக்குநர்கள் குணசீலன், மகிமை நாதன் ஆகியோரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக கைதான தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 7 நாள் காவலில் எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அவர்களை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, பண மோசடி நடைபெற்றது எப்படி? மோசடி பணத்தில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டதா? எந்தெந்த ஊரில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டன, வேறு எந்தெந்த தொழில்களில் நேரடியாகவோ, பினாமி பெயரிலோ முதலீடு செய்யப்பட்டது என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த 300 கிலோ தங்கம் எங்கே? லாபத்தில் இயங்கி வந்த நிதி நிறுவனம், முதலீட்டார்களுக்கான முதிர்வு தொகை கொடுக்க பணம் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனிடம் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேவநாதன் அளித்த தகவலின்படி நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது. தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று 5வது நாளாக தேவநாதனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.