தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீரென சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை வந்துள்ள அஜித் தோவல் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆர்என் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் உள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு என்பதால் இந்த பதவி என்பது மத்திய கேபினட் அந்தஸ்துக்கு நிகரானது. அஜித் தோவல் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருவதும் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் அஜித் தோவல் இன்று சென்னை வந்தார். அதன்பிறகு அவர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது எந்த மாதிரியான ஆலோசனை என்பது பற்றிய விபரம் எதையும் ஆளுநர் ஆர்என் ரவி தரப்பிலோ அல்லது அஜித் தோவல் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இன்றைய சந்திப்பில் இலங்கை விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது தமிழகத்துக்கும், இலங்கைக்கும் கடல்வழி உறவு உள்ளது. மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். இந்நிலையில் தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அஜித் தோவல் 2 நாள் பயணமாக கடந்த 29 ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பிற்கு சென்றார். இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் அஜித் தோவலின் இந்த பயணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இலங்கையில் 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு அஜித் தோவல் விமானத்தில் சென்னை வந்திறங்கினார். இலங்கையில் இருந்து அஜித் தோவல் நேரடியாக டெல்லி செல்லாமல் சென்னை வந்து ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இலங்கை மற்றும் தமிழகம் இடையேயான விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.