ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை: கமிஷனர் அருண்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது என்றும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்றும் அருண் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை மாதவரம் ஏரிக்கரை அருகே உள்ள பகுதிக்கு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடத்தை அடையாளம் காண போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்தில், தங்க நகை மோசடியில் சிக்கிய ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. அந்நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது. இதன் பின்னணியில் கொலை அரங்கேற்றப்பட்டதா என்பதை போலீசார் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து, கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் பல ரௌடிகள் கைகோர்த்து செயல்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை எட்டியுள்ள நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய தகவலை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது, கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம், முக்கிய நபர்கள் குறித்தும் காவல்துறை தெரிவிக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் பல ரௌடிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.