டெல்டாவில் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

டெல்டாவில் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான தண்ணீர் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் காவிரி டெல்டாவில் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 19,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வருடம் நல்ல நெல் விளைச்சல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தற்போது குறுவை சாகுபடி அறுவடையும் டெல்டா பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பொருளாதாரமின்மை, கடன் சுமை, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் முதலீடு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நடப்பு நெல் கொள்முதல் காலத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல தேவையான நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்க வேண்டும். இந்த ஆண்டு காவிரியில் நீர் திறக்காததால் ஆழ்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையை தொடங்கி உள்ளனர். ஆனாலும், இன்னும் சில மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, அரசு நெல் கொள்முதல் நிலையங்களை கால தாமதமின்றி திறந்து, கொள்முதல் செய்ய வேண்டும். நாள்தோறும் கொள்முதல் வரம்பை அதிகப்படுத்த வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான சணல் இல்லாததாலும், நெல்லை பாதுகாப்பதற்கு போதுமான தார்ப் பாய்கள் இல்லாததாலும், நெல்மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாலும் விவசாயிகள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சணல், தார்ப் பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்துள்ள நிலையில் மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தேவையான எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதுகாத்து, உரிய விலையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.