சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோவை சந்தித்த ஜமாத் நிர்வாகிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக மதிமுக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவுலானா முனைவர் அன்வர் பாதுஷாஹ் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மவுலானா இல்யாஸ் ரியாஜி ஆகியோர் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோவை சந்தித்துப் பேசினர். அப்போது, மத்திய பாஜக அரசு சுமார் 40 திருத்தங்களை முன்வைத்து தாக்கல் செய்திருக்கும், சிறுபான்மை மக்களுக்கு முற்றிலும் எதிரான ’வக்பு சட்டத் திருத்த மசோதா – 2024’ (Waqf Amendment Bill 2024) குறித்து கலந்துரையாடினர். மேலும், அவர்கள் தயாரித்து வந்திருந்த விளக்க அறிக்கையையும் துரை வைகோவிடம் வழங்கினர்.
அப்போது, இந்த சட்டம் மக்களவையில் தாக்கல் செய்தபோதே வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய அவைத் தலைவரிடம் அனுமதிகேட்டு மறுக்கப்பட்டதையும், அவ்வாறு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் நேரடியாக சென்று பதிவு செய்ததையும் நிர்வாகிகளிடம் துரை வைகோ பகிர்ந்து கொண்டார். இந்த வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து வழியிலும் கடமையாற்றுவேன் எனவும் துரை வைகோ உறுதியளித்தார்.
சந்திப்பின்போது, மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, மதிமுக நாமக்கல் மாவட்ட அவைத்தலைவர் நா.ஜோதிபாசு முன்னிலையில், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் துரை வைகோவை சந்தித்தனர். அவர்கள், ராசிபுரம் பேருந்து நிலையத்தை நகரத்துக்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு மாற்றுவதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.