அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டி அழிக்கும் இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர்.
நேற்றைய தினம், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டனிடம் நீதிபதிகள், ‘‘கடந்த 2016-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். இயந்திரம் இல்லாத பள்ளிகளில் தேவைப்படும் மாணவிகளுக்கு அவற்றை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளே வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் என்ன காரணத்துக்காக தற்போது அந்த இயந்திரங்கள் செயல்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். மேலும் இந்த அவமதிப்பு வழக்கை முறையாக பட்டியலிட வேண்டும் என பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை செப்.12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.