சென்னையில் அசோக்நகர் பள்ளியில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள் ஊடுருவி இருப்பது தெரிகிறது என விசிக துணைப் பொதுச் செயாலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.
பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகா விஷ்ணு என்பவர், சிறு வயதில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செயல்பட்டுள்ளார். தற்போது, திருப்பூரை மையமாக கொண்டு பரம்பொருள் ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக வகுப்பு எடுத்து வரும் மகா விஷ்ணு, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் மாணவ மாணவிகளின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி கண்களை மூட வைத்து பாடலை ஒழிக்க விட்டு அவர்களை அழ வைத்து இருக்கிறார். தொடர்ந்து ஹிப்னாடிசம் செய்தது போல மாணவிகள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். குறிப்பாக அவரது பேச்சு ஆன்மீகத்தை தவிர்த்து குறிப்பிட்ட மதத்தை உயர்த்தி பேசுவது போலவும், குறிப்பிட்ட சில மத கருத்துக்களை பரப்புவது போல இருந்தது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்த அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார். இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் விசிக துணைப் பொதுச் செயாலாளர் வன்னி அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள் ஊடுருவி இருப்பது தெரிகிறது. அமைச்சர்களை சந்தித்த படங்களை காட்டி பள்ளி தலைமை ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளார். அமைச்சர்களே ஏமாறும் போது தமிழரசி போன்ற தலைமை ஆசிரியர்கள் எம்மாத்திரம்? தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் தேவையற்றது. அடிப்படை மாற்றம் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடமிருந்து தொடங்க வேண்டும். பள்ளிகளில் இயங்கும் சாரணர் அமைப்புகளையும் கண்காணிக்க வேண்டும். அடிப்படையில் சமூக மாற்றத்தை கற்றுத் தரும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து சனாதனக்கும்பல் இயங்குவதை கவனிக்க வேண்டும்.
மாநில கல்வி சரியில்லை என ஆளுனர் ரவி அவர்களின் செயல்பாட்டை இத்தோடு பொருத்தி பார்க்க வேண்டும். மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மீதமுள்ள ஆண்டுகளிலாவது பள்ளி கல்வித்துறையை சமூக நீதித்துறையாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.