இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 11) சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 11ம் தேதி) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசௌந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தார். 1942 ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் தனது 18ஆவது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். பிரிட்டீஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் இராணுவத்தில் எட்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக ‘ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
அம்பேத்கர் பிறந்தநாளில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு நடத்துதல், இரட்டை குவளை ஒழிப்பு மாநாடு நடத்துதல், தீண்டாமைக்கு எதிராக சட்டம் போராட்டம் நடத்துதல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என துடிப்புடன் செயலாற்றிய இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக மிக இளவயதிலேயே உருவெடுத்தார்.
1957ஆம் ஆண்டு காராமங்கம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழக்க அவரது உடலை மயானத்துக்கு பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்ப அது தொடர்பான கலவரத்தில் 42 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை தடுக்க அனைத்து சமூக தலைவர்களையும் உள்ளடக்கி கூட்டம் நடத்தப்பட்டது, அதில் இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார். மறுநாள் செப்டம்பர் 11 நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய இம்மானுவேல் சேகரனை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. 12ஆம் தேதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. 13ஆம் தேதி மீண்டும் கலவரம் வெடித்த நிலையில் 85 பேர் பலியாகினர்.
சமூகப் போராளியாக செயல்பட்ட இம்மானுவேல் சேகரன் 33 வயதிலேயே படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது நினைவாக ஆண்டுதோறும் குரு பூஜை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழக அரசும் அவர் மறைந்த செப்டம்பர் 11ஆம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜி.க்கள், 19 எஸ்.பி.க்கள், 61 டிஎஸ்பி.க்கள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகணபதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக சார்பில் துரை வைகோ எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.