கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன் என்று பிரதமர் பேசியது என்பது அவருக்கு உளவியல் பாதிப்பை தான் காட்டுகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணமாக சென்ற நிலைியல் இந்த முறை 3 நாள் பயணமாக புறப்பட்டார். விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸில் இறங்கிய ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு என்பது அளிக்கப்பட்டது. அதன்பிறகு ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் அவர் பாஜக மற்றும் பிரதமர் மோடியை தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் தான் அமெரிக்காவில் 3 நாள் பயணத்தை முடித்து கொண்டு ராகுல் காந்தி இன்று நாடு திரும்புகிறார்.
வர்ஜீனியாவில் நம் நாட்டின் மதசுதந்திரம் பற்றி பேசி பாஜகவை தாக்கினார். சீக்கியர்களின் டர்பன் விவகாரம் பற்றி பேசி பரபரப்பை கிளப்பினார். அதன்பிறகு டெக்சாஸின் டல்லாஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதேபோல் ராகுல் காந்தி வாஷிங்டன் டிசி-யில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்லைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி 2024 தேர்தலின்பாது உளவியல் ரீதியாக பிரதமர் மோடி பாதிக்கப்பட்டதாக பரபரப்பாக பேசியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-
கடவுள் ஒரு நோக்கத்துக்காக தன்னை தேர்வு செய்து பூமிக்கு அனுப்பி உள்ளார். கடவுள் தான் தன்னை செயல்பட வைக்கிறார் என்று பிரதமர் மோடி லோக்சபா தேர்தலில் பேசினார். நான் கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன் என்று அவர் கூறியபோது உண்மையிலேயே அவரை மனதளவில் தாக்கிவிட்டோம் என்பதை உணர்ந்தோம். அவர் உளவியல் ரீதியாக பேசுவதை இழந்து விட்டதாக நினைத்தோம். நான் சிறப்பானவன். நான் தனித்துவம் வாய்ந்தவன். நான் கடவுளிடம் பேசுகிறேன் என்று பேசியதை மக்கள் புதிதாக நினைத்து இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியிலான பாதிப்பாக நாங்கள் பார்த்தோம். மேலும் அவர் சிக்கலில் இருப்பதை தெளிவாக உணர்ந்தோம். குஜராத் அரசியலில் மோடி ஆதிக்கம் செலுத்தினார். காரணம் அங்கு அதிக எதிர்ப்பு என்பது இல்லை. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் அவர் எதிர்கொண்ட சவால்களை புரிந்து கொள்ள போராடினார்.
மேலும் லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த கூட்டணி என்பது உடைந்தது. இந்த கூட்டணி நடுப்பகுதியில் இருந்து இரண்டாக உடைந்தது. இந்த லோக்சபா தேர்தல் என்பது சரியான முறையில் நடந்ததாக நான் கருதவில்லை. அதேவேளையில் இந்த தேர்தல் என்பது கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாக நான் நினைக்கிறேன். நியாயமாக தேர்தல் நடந்தால் பாஜக 240 இடங்களை நெருங்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் நான் நிச்சயம் ஆச்சரியப்பட்டு இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருவதோடு, பதிலுக்கு ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.