கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோ, அதைத்தொடர்ந்து அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அன்னபூர்ணாவில் தான் ஜிலேபியும் சாப்பிட்டதில்லை, சண்டையும் போட்டதில்லை என்று வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
மத்திய அரசால் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி விஸ்கர்மா ஜெயந்தி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்வகர்மா திட்டம் தமிழக அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 18 வகையான தொழில் செய்யக்கூடிய கைவினை கலைஞர்களுக்கு விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு, பஞ்சாயத்து, மாவட்ட அளவில் அவர்களது தகவல்கள் உண்மையா என கண்டறிந்து பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் செலுத்தி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, 15 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள், 50 ஆயிரம் முதல் தொழிலுக்கான முதலீடு அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இத்திட்டத்தை தமிழக அரசு அரசிதழில் வெளியிடாமல், அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.
பாஜக சார்பில், எம்எல்ஏ என்கிற முறையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று முகாம்கள் நடத்தி அவர்களது விவரங்களைப் பதிவு செய்து காத்திருக்கிறோம். ஆனால், மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு தமிழக அரசு வேண்டும் என்றே தடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழக பாஜக சார்பில், விஸ்கர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17 ஆம் தேதியன்று இத்திட்டத்தை தொடங்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனை குலத் தொழில் என்று கூறி எதிர்ப்போம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். இது ஜாதியை வைத்து அமல்படுத்துகிற திட்டம் அல்ல. சலூன் கடை முதல் மீன்பிடி படகு கட்டுபவர்கள், தையல் கலைஞர்கள் என எல்லோருக்குமானது இத்திட்டம். இத்திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அம்மக்களுடன் இணைந்து நாங்கள் கோரிக்கையை போராடி வலுப்படுத்துவோம்.
கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து ஒரு துறைக்கு மட்டுமல்லாமல் மிகப்பெரிய முயற்சியாக ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் வகையில் அனைத்து துறை தொழில் துறையினர் மற்றும் தனிமனிதருக்குமான ஒரு நிகழ்ச்சியாக கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எத்தனை மனு, எவையெல்லாம் முக்கியமான பிரச்னை என அமைச்சர்களிடம் கூறுகின்றனர். பட்ஜெட்டில் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர் நேரடியாக உரையாடினார். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர். அப்போது, அவர் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோவில், எனது கடைக்கு வருவார்கள். காபி, ஜிலேபி சாப்பிடுவார்கள். கொஞ்சம் சண்டையும் போடுவார்கள் என்று கூறினார். அதற்கு அங்கு நாங்கள் எதுவும் பேசவில்லை. என்னால் கேட்டிருக்க முடியும் எத்தனை முறை உங்கள் கடைக்கு வந்திருக்கிறேன். எப்போதாவது வந்து சண்டை போட்டிருக்கிறேனா, எத்தனை முறை வந்து ஜிலேபி சாப்பிட்டிருக்கேன். இவற்றையெல்லாம் நான் மேடையிலேயே சொல்லியிருக்க முடியும். அதனை நான் விரும்பவில்லை. அது ஒரு பொது மேடை. எங்களுக்குள் என்னதான் நட்பு இருந்தாலும் அந்த இடத்தில் பேசாமல் எழுந்து வந்துவிட்டோம்.
அவர் நேற்று காலை 7 மணியில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைத்து தவறாகப் பேசிவிட்டேன் மன்னித்து விடுங்கள், நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இப்போதே வருகிறேன் என்று கேட்டு மதியம் வந்தார். அப்போது பேசிய அவர், நான் பேசியது தவறுதான். உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இப்பிரச்னை சோஷியல் மீடியாவில் வேறு விதமாகப் போய்விட்டது. ஜிஎஸ்டியில் எனக்கு கருத்து மாறுபாடு இருந்தால்கூட அதற்கான வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். இந்த விஷயம் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன். நான் ஆர்எஸ்எஸ்யை சேர்ந்தவர் என்று கூறினார். அப்போது, ஜிஎஸ்டி குறித்து கருத்து சொல்வதற்கு உரிமை உள்ளது. அதற்கு பதில் சொல்வதற்கான கடமை எங்களுக்கு உள்ளது. உங்களுடைய பெண் எம்எல்ஏ என்னென்ன சாப்பிட்டார் என்பதெல்லாம் சொல்வது சரியா. அடுத்த முறை யாராவது சாப்பிட வந்தால் இதையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று தோன்றாதா என்று கேட்டார். உடனே அவர் என்னிடமும் மன்னிப்பு கேட்டார். நீங்கள் என் சகோதரி மாதிரி ஏதோ அங்கு பேசிவிட்டேன் என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பொது மேடையில் வைத்து நம் கட்சிக்காரர்களை இப்படி சொல்லிவிட்டார்கள் என்ற வருத்தம் எங்கள் கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது. அரசியல் என்றாலே போராட்டம், சவால் நிறைந்த பாதை. பெண்களுக்கான சம வாய்ப்புகள், சமமரியாதை இருக்கிறதா என்றால் இல்லை. ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ அந்த மேடையில் இருந்தால் இதுபோன்ற பேச்சுகள் வர வாய்ப்பு உள்ளதா?. பெண் என்பதற்காக எந்தவொரு கூடுதல் சலுகையும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் தேர்தல் இல்லாத சமயத்தில் இதுபோன்று வந்து பிரச்னையை சொல்லுமாறு மக்களிடம் கூறியுள்ளார்களா. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நீங்கள் பெண்தானே எனும் பார்வை சமுதாயத்தில் உள்ளது. இதை சொல்ல வேண்டியது எனது கடமை. நாங்கள் அன்னபூர்ணா சீனிவாசானை மிரட்டி கொண்டு வந்தும், ஆணவத்தில் கூப்பிட்டு வந்தும் மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி வருகின்றனர். ஜாதி வர்ணம் வேறு பூசுகின்றனர்.
இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை.
ஆனால், பரம்பரை பரம்பரையாக பொய் பிரசாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் நம் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.