அரசு பள்ளியில் பாவ, புண்ணியம் என பிறபோக்குத் தனமாக பேசியதோடு, மாற்றுத் திறனாளி ஆசிரியரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரும், ஆன்மீக பேச்சாளருமான மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கர், அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார்.
இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார். இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகம் திரும்பிய மகாவிஷ்ணுவை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி மகாவிஷ்ணுவை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து 3 நாட்கள் மகாவிஷ்ணுவை விசாரிக்க அனுமதி கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரின் காவல் நிறைவடைந்ததை அடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மகாவிஷ்ணுவை போலீசார் ஆஜர் படுத்தினர். இதை அடுத்து செப்டம்பர் இருபதாம் தேதி வரை மகாவிஷ்ணுவை புழல் சிறையில் அடைக்க நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து மீண்டும் மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.