அப்பாவை என்னால் மறக்க முடியவில்லை, அவருடைய கையை பிடித்துக் கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது என விஜயகாந்த் குறித்து மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகனும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது தந்தை குறித்து பேசிய போது மேடையிலேயே துக்கம் நெஞ்சை அடைத்து கண்ணீர் விட்டு பேசியதை பார்த்த தொண்டர்களும் பெண்களும் கண் கலங்கினர். இதுகுறித்து விஜய பிரபாகரன் தனது கட்சி தொண்டர்களிடம் அழுது கொண்டே பேசியதாவது:-
மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் போது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேமுதிக எனும் பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 ஆண்டுகளை கடந்து வருகிறது. இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தேமுதிகவை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுவற்றில் அடித்த பந்து போல் மக்களுக்கு வந்து உதவி செய்து கொண்டே இருப்போம். தேமுதிக மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி. அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லையே.
நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என கூறுவதை ஏற்க முடியாது. என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள். எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். எனது தாய், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார். கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய்விடும் என எண்ணினார்கள். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் இந்த கட்சியை கொண்டு வந்து மறுபுறம் கேப்டனையும் எங்களையும் தோளில் சுமந்து கொண்டு இந்த கட்சியை இந்த நிமிடம் வரை எங்கள் தொண்டர்களுக்காக பிரேமலதா விஜயகாந்த் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்று இருக்கும் ஆட்சியாளர்களில் எந்த பெண் தலைவரும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும்தான். அங்கு லைட் போர்டு வச்சிருக்காங்க, அதில் கேப்டனின் சிரிப்பு இன்று வரை என்னால் மறக்க முடியாது. என் அப்பா கையை பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், கேப்டன் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நாங்கள் சின்ன பசங்க, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது, நாங்கள் வளர்ந்து விட்டதால் அவரை ஒவ்வொரு வினாடியும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்தது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.