லாட்டரி விற்பனை தொடர்பான வழக்கில் மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி!

கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் லாட்டரி விற்பனை தொடர்பான வருமான வரி வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றியதை எதிர்த்து லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மற்றும் அவரது மகள் டெய்ஸி ஆதவ் அர்ஜூனா மற்றும் அவர்களது கோவையைச் சேர்ந்த லாட்டரி விற்பனை நிறுவனமான சுவாலி ரியல் ப்ராப்பர்ட்டீஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோவையை பதிவு அலுவலகமாக கொண்டு இயங்கும் எங்களது லாட்டரி நிறுவனம் கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு கொல்கத்தா வருமான வரித்துறையினர் எங்களது நிறுவனத்தில் ரெய்டு நடத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக கோவை வருமான வரித் துறை அதிகாரிகள் எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா வருமான வரித்துறைக்கு மாற்றியுள்ளதாகவும், எனவே இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தாவுக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் எங்களுக்கு கடந்த ஏப்.25 அன்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அந்த நோட்டீஸூம் காலதாமதமாக கடந்த மே 20 அன்று எங்களுக்கு கிடைத்தது. எங்களது இல்லம் மற்றும் பதிவு அலுவலகம் அனைத்தும் கோவையில் இருக்கும்போது எங்களுக்கு எதிரான வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றுவது என்பது சட்டவிரோதம். எனவே எங்கள் மீதான வழக்கை கோவை வருமான வரித்துறை அதிகாரிகளே விசாரிக்க உத்தரவிட வேண்டும். வழக்கை கொல்கத்தாவுக்கு மாற்றி கோவை அதிகாரிகள் பிறப்பித்துள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் இந்த வழக்கை கொல்கத்தா வருமான வரித்துறையினர் விசாரிக்க தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.ஸ்ரீராமன் ஆஜராகி, “மனுதாரர்களின் பதிவு அலுவலகம் கோவையில் இருக்கும்போது, கோவையில் நடந்த ரெய்டு தொடர்பாக பதியப்பட்ட வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றுவது என்பது சட்டவிரோதம். எனவே, இந்த வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றக்கூடாது” என வாதிட்டார்.

அதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர் பி.ராமசுவாமி, “மனுதாரர்கள் தங்களது தொழிலை கொல்கத்தா வருமான வரித்துறையின் ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் பதிவு அலுவலகம் கோவையில் இருந்தாலும், தமிழகத்தில் லாட்டரி தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவர்கள் லாட்டரி தொழிலில் ஈடுபடவில்லை. அவர்களின் வீட்டில் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற லாட்டரி விற்பனை தொடர்பாகவே ரெய்டு நடத்தப்பட்டது. எனவே இந்த வழக்கை கொல்கத்தா வருமான வரித்துறைக்கு மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர்களின் நிறுவனம் தங்களது லாட்டரி தொழிலை தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை. கொல்கத்தா வருமான வரித்துறையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் சூழலில், இந்த வருமான வரி வழக்கு விசாரணையை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றியதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.