அரவிந்த் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்ட முதல்வர் ஆதிஷி!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் ஆதிஷி. இந்நிலையில், முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புதிய முதல்வராக ஆதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆதிஷி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். அது பலரது கவனத்தை பெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று எனக்கு. அவரது சுமையை போல நானும் இதை சுமக்கிறேன். எப்படி ராமரின் பாதுகையை (காலணி) அவர் தனது அரியணையில் வைத்து ஆட்சி செய்தாரோ, அதே உணர்வோடு அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்” எனத் தெரிவித்தார்.