மசோதாக்களை ஆளுநர் காரணம் கூறாமல் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு!

எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பின் இந்திய பிராந்திய 10வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து மாநில சட்டமன்றங்களின் சபாநாயர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார். ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகள் ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நீட் மசோதா குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே இழுத்தடிக்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்தக் காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்தி வைக்கிறார். மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது என தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார். மேலும், சட்டமன்றத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயல்படுத்த முடியவில்லை. சட்டசபையை அவமதிப்பது எம்.எல்.ஏக்களை அவமதிப்பது போல், மக்களை அவமதிப்பது போல் ஆகும். சமீபகால நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி உள்ளன என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.