அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க! அப்புறம் என்ன அம்மா உணவகம்: ஆர்.எஸ். பாரதி

அம்மா உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஆர். எஸ் பாரதி, அம்மாவே போய் சேர்ந்துடுச்சு, அப்புறம் எதற்கு அம்மா உணவகம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் நடந்த சென்னை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பங்கேற்றார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:-

ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அம்மாவே போய் சேர்ந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ 150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தை எல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகிறார். வீணாய் போன உணவுகளை எல்லாம் ஜெயலலிதா அரசு, அம்மா உணவகத்தில் பரிமாறியது. அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பீகார், உத்தரப்பிரதேசக்காரன் தான் மொத்தமாக சாப்பிடுறான். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்குத்தான் சாப்பாடு போடுகிறோம்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மகாத்மா காந்தியின் ஆட்சி. திமுக தொண்டர்கள் வட்டச் செயலாளர் மீது குறை இருந்தால் பகுதி செயலாளரிடம் கூறுங்கள். பகுதி செயலாளர் மீது குறையிருந்தால் மாவட்ட செயலாளரிடம் கூறுங்கள். மாவட்டச் செயலாளர்கள் அல்லது எம்எல்ஏக்கள் மீது ஏதேனும் குறை இருந்தால் நேராக திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்து என்னிடம் புகார் அளியுங்கள். எந்த நேரத்தில் யார் வந்து புகார் சொன்னாலும் கேட்க நான் தயார். அவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

திமுக பவள விழாவை கொண்டாடுகிறது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. திமுகவுக்கு இது மிகப் பெரிய நிகழ்ச்சி. எங்கள் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகவில்லை. புதிதாக எங்கள் கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. ஓபிஎஸ் எப்படியாவது அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என போராடி வருகிறார். அதற்காகவே வேலுமணி, வைத்திலிங்கம் மீது திமுக ஆட்சியில் பொய் வழக்குப் பதிவு செய்யப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.