மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் சென்னைக்கு வந்த நிர்மலா, திமுகவை விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்பி தயாநிதி மாறன், நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் ஆசையுடன் தமிழகத்தில் டேரா போட்டார் என கூறியுள்ளார்.
திமுக எம்பி தயாநிதி மாறன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்தப் பிறகு, முதலமைச்சராகும் ஆசையில் மூன்று மாதங்கள் தமிழகத்தில் டேரா போட்டவர் தான் நிர்மலா சீதாராமன். அடிமைகளின் ஆட்சியை வீழ்த்தலாம் என்று நினைத்தனர். அப்போது அவர், இந்தாண்டு நீட் இருக்காது. அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறினார். முதலமைச்சர் கனவு இருக்கும்போது வேறு மாதிரி பேசினீர்கள். இப்போது அந்த கனவு நிறைவேறாததால், வேறு மாதிரி பேசுகிறார். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள். அதனால் மக்களின் பிரச்னை எங்களுக்கு தெரியும். சிலர் மக்களால் தேர்வு செய்யப்படாமல், நியமன அடிப்படையில் அமைச்சர்களாகிறார்கள். அவர்களுக்கு மக்களின் பிரச்னை பற்றி தெரிவதில்லை. கேட்டால், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று சொல்கின்றனர். கவுன்சிலர்கள் போல மக்களின் பிரச்னைகளை இறங்கி கேட்க வேண்டும் என்று தலைவர் சொல்கிறார். அவர்கள் மக்களை சந்திப்பதில்லை. அதிகார துஷ்பிரயோகம் தான் செய்கிறார்.
அன்னபூர்ணா சீனிவாசன் உண்மையை தானே பேசினார். ஜி.எஸ்.டி வரியால் கம்ப்யூட்டரே திணறுகிறது. ஒரே சீராக வரியை நிர்ணயித்து, அதை எளிதாக்குங்கள் என்று தானே சொன்னார். அதற்கு அவரை கூப்பிட்டு வைத்து மிரட்டுவது நியாயமா. கோவை மக்கள் மீது இருக்கும் காழ்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. கோவை மக்களை மிரட்டலாம் என்பது தவறில்லையா. இதேபோல மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் எதற்காக இவ்வளவு வரி நிர்ணயிக்கிறீர்கள். என் வரியில் தான் இந்திய அரசாங்கமே நடக்கிறது என்று கூறுகிறார். அவருக்கு இதே நிர்மலா சீதாராமன் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இந்தி பேசுபவர் என்றால் மரியாதை. தமிழில் பேசினால், இளக்காரமா. எல்லோரும் இந்திய பிரஜைகள். கேள்வி கேட்பது மக்களின் உரிமை. அதை நிவர்த்தி செய்வது அமைச்சரின் பொறுப்பு. பொறுப்பற்ற அமைச்சரின் செயல்பாடு வருத்தமளிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூ.25 லட்சத்தை கடந்துவிட்டது. இதற்கு மோடி அரசுதான் காரணம். நீட் தேர்வால் நீங்கள் என்ன சாதித்தீர்கள். பிரதமருக்கு, நிர்மலா சீதாராமனுக்கு மருத்துவம் பார்ப்பவர்கள் நீட் தேர்வு எழுதினார்களா. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதாதவர்கள் தான். மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றீர்கள். சமஸ்கிருதத்துக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்மந்தம். உயர் சாதியினர் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும். மற்ற சாதியினர் மருத்துவம் படிக்க கூடாது என்கிறார்கள். நீட் வினாத்தாள் எப்படி லீக்கானது. அந்த ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்தாரா. தென்னகத்தில் ஒரு மாதிரியும், வடக்கில் ஒரு மாதிரியும் நீட் தேர்வு நடக்கிறது. இங்கு இவர்கள் காட்டும் கெடுபிடியில் மாணவர்களுக்கு படித்ததெல்லாம் மறந்துவிடுகிறது. உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்கள் காப்பி அடிக்க ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பிளஸ் டு தேர்தவில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, அங்கு நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுக்கிறார்கள். இது எல்லாமே நீட் தேர்வில் உள்ள குளறுபடியை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.