தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.வி.சண்முகம் பேசிய பேச்சு மிகவும் தவறானது, அவர் மக்கள் பிரதிநிதியாக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசி இருந்தார். தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். தமிழக அரசின் 12 மணி நேர வேலை மசோதா, கஞ்சா புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசையும், முக ஸ்டாலினையும் பற்றி அவதூறாக பேசி இருந்தார் சி.வி.சண்முகம். அவரது இந்த பேச்சுக்களுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிவி சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவி சண்முகம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சிவி சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசிய 2 வழக்குகளும் தொடா்ந்து விசாரணையில் இருந்தது.
இதனை எதிர்த்தும், எல்லா வழக்குகளையும் ரத்து செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றபோது, சிவி சண்முகத்திற்கு எதிராக விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. மேலும் தமிழக அரசும் இதற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சிவி சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்து இருந்தது. அதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் தரப்பில் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். எம்.பி.யாக இருந்து கொண்டு இப்படி சிவி சண்முகம் பேசி வருவதாகவும், அவர் யாரையும் விட்டு வைக்காமல் அவதூறாக பேசி வருவதாகவும் தமிழக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், சிவி சண்முகம் பேசியதன் சில பகுதிகளை படித்துப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதி இதுபோல பேசலாமா? நீங்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்கு சிவி சண்முகம் இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என சிவி சண்முகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்டால் இந்த வழக்கை தொடா்ந்து விசாரிக்கலாம். என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.