தயாநிதி மாறன் பேச்சுக்கு, பாஜகவின் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சுக்கு, பாஜகவின் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது என்று வானதி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் கோவையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருந்தது. இதையடுத்து, நேற்றைய தினம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஆசைப்பட்டு 3 மாதங்கள் தமிழகத்திலேயே தங்கியிருந்தவர் நிர்மலா சீதாராமன். அப்போது, இந்த ஆண்டு நீட் இருக்காது என்று சொன்னார். முதல்வர் கனவு இருக்கும்போது வேறு மாதிரி பேசினார்.. முதல்வர் கனவு இல்லை என்பதால் வேறு மாதிரி பேசுகிறார். நீட் தேர்வு கொண்டு வந்ததன் மூலம் எதனை சாதித்து விட்டார்கள்? குடியரசுத் தலைவர், பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மருத்துவம் பார்ப்பவர்கள் என்ன நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தவர்களா? நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக செல்கிறோம். அதனால் மக்கள் பிரச்னைகளை எங்களுக்கு தெரியும்.. ஆனால் சிலரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், பதவியில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.. அப்படி எம்.பி ஆனவர்கள் 10 வருடங்களுக்கு மேலாகவே அமைச்சராக இருக்கிறார்கள்.. மக்கள் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. கேட்டால், நாங்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார்கள். இதெல்லாம் ஒரு பேச்சா?

ஜிஎஸ்டி வரி தொடர்பாக கேட்டதில் என்ன தவறு? அதற்காக அழைத்து வைத்து மிரட்டுவது என்பது சரியா? குஜராத்தில் இதேபோல கேள்வி எழுப்பிய ஒருவருக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் இதே நிர்மலா சீதாராமன். குஜராத்தில் இந்தியில் பேசினால் மரியாதை? கோவையில் தமிழில் பேசினால் இளக்காரமா?” என்றெல்லாம் தயாநிதி மாறன் விமர்சித்திருந்தார்.

இந்த பேச்சுக்குதான் தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.. “இதுதான் உங்கள் திராவிடத்தின் வளர்ப்பா தயாநிதி மாறன் அவர்களே?” என்று பாஜகவின் மூத்த தலைவரும், எம்எல்ஏமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி, ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நமது மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு பெண் அரசியலிலும் அதிகாரத்திலும் வளர்ந்து வந்தால், நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், உங்கள் கூலிப்படைப் பேச்சாளர்களும் அவர்களை எத்தனை கீழ்த்தரமாக விமர்சிக்கவும் தயங்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். ஆனால், நமது மத்திய நிதியமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பற்றி, நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான திரு. EVKS இளங்கோவன் அவர்களும் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் காழ்ப்புடன் விமர்சிக்கிறீர்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கையா? இதைத்தான் இண்டியா கூட்டணியே தங்கள் கொள்கையாக முழங்குகிறீர்களா?

ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள உங்களுக்கு, முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பேச குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா? எனவே, அரசியலில் வளர்ந்து வரும் பெண்களையும், அதிகாரத்தில் மிளிரும் பெண்களையும் கண்டு அஞ்சி, பொறாமையில் பொங்கி இப்படி மட்டமான கருத்துக்களால் விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியனருக்கே பழக்கமில்லாத “நாகரிக அரசியலை” நீங்களாவது முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.