“உதயநிதி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராக வருவதை காங்கிரஸ் வரவேற்கிறது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
நாமக்கல், திருப்பூரில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று (செப்.24) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அவதூறுகளும், மிரட்டலும் விடுத்து வரும் பாசிச பாஜகவை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து ராகுல் காந்தியை பேசவிடாமல் மவுனமாக்குவதற்கு முயற்சி செய்கின்ற பாஜகவை கண்டித்தும், ஆர்எஸ்எஸ் திட்டங்களை கண்டித்தும் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரின் சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பதில் சொல்லி இருக்கிறார். அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. இதில் காங்கிரஸ் தலையிட வாய்ப்பில்லை. இண்டியா கூட்டணி எஃகு கோட்டை போன்று வலிமையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை எல்லோரையும் ஒற்றுமையாக இருந்து பாசிச சக்திகளை விரட்ட வேண்டும். இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி பாசிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் எனும் முதன்மையான அஜெண்டாவை வைத்து இணைந்து செயல்படுகிறோம். இண்டியா கூட்டணியிலிருந்து ஒருவரும் போக வாய்ப்பு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி. அவர்கள் எதை வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். ஏன் உதயநிதி துணை முதல்வராக வரக்கூடாது? அவர் நன்றாக பயிற்சி பெற்றிருக்கிறார். சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராக வருவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அவரை துணை முதல்வராக அறிவித்தால் மகிழ்ச்சிதான்.
ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதை பாசிஸ்டுகள் திரித்துப் பேசி வருகின்றனர். மலைவாழ் பழங்குடியின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் அரணாக இருப்பது ராகுல் காந்தி மட்டும் தான். அவர் நாட்டு மக்களின் குரலாக இருக்கிறார். எதை எதையோ சிதைத்தார்கள். இப்போது ராகுல் காந்தியின் பேச்சு, கருத்துக்களை சிதைக்க முயற்சிக்கிறார்கள். இதை ஒருபோதும் இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
திரைப்பட நடிகர் விஜய்யின் அரசியல் வரவு திமுகவை பாதிக்காது. சட்டம் – ஒழுங்கை காப்பதில் தமிழக முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறார். காவல் துறையினரும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். இன்னும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். பழநி கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலப்படம் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசியுள்ள கருத்து கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.