செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார்!

அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து இன்று அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

தமிழகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்த அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தான் நேற்று உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 471 நாள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். இதனை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள், பிரியாணி வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும் செந்தில் பாலாஜி மெரினா கடற்கரைக்கு சென்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவரை அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கூட்டணி கட்சியினரும் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று மாலையில் செந்தில் பாலாஜி சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். உதயநிதி ஸ்டாலினை பார்த்த செந்தில் பாலாஜி அவரது கழுத்தில் துண்டு அணிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவரை கட்டியணைத்து வரவேற்றார். அதன்பிறகு செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவித்து இருக்கையில் அமர வைத்து பேசினார். தற்போது செந்தில் பாலாஜி – உதயநிதி ஆகியோர் சந்தித்த வீடியோ மற்றும் போட்டோ வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சந்திப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக அண்ணன் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்” என கூறப்பட்டுள்ளது.