இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. நேற்று அவரது மகள் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஹிஸ்புல்லா இதுகுறித்து தகவல் எதுவும் கூறவில்லை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. போர் விமானங்கள், ராக்கெட்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 900-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ள நிலையில் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். இதுவரை நடந்துள்ள தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கான நேரம் இது, அமைதி பேச்சு வார்த்தைக்கு லெபனான்-இஸ்ரேல் முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதியான முகமது உசைன் ஸ்ரோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஹிஸ்புல்லாவுக்கு எதிராக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரானஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா காயம் அடைந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சில தகவல்கள் உலாவின. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹசன் ஹஸருல்லாஹ் மரணம் அடைந்ததாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹசன் நஸ்ரல்லா அந்த கட்டிடத்தில் தான் இருந்தார் எனவும் பலத்த காயமடைந்த அவர் இன்று உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹசன் நஸ்ரல்லாவின் உடல்நிலை குறித்தோ அல்லது அவரது மரணம் குறித்தோ ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.