தொழில்களை ஊக்குவிப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது தமிழகம்: சு.வெங்கடேசன்!

சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட்அப் தமிழ்நாடு) சார்பில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் முன்னிலை வகித்தார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் சிறப்புரையில் பேசியதாவது:-

இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தோடு நடத்தப்பட்ட வணிகத்தின் அடையாளமாக இன்றளவும் நாணயங்கள் கிடைத்து வருகின்றன. இந்தியாவில் கிடைத்த நாணயங்களில் 80 சதவீதம் நாணயங்கள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வணிகம் செய்த நிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கிடைத்த நாணயங்களில் 60 சதவீதம் வைகை நதிக்கரையில்தான் கிடைத்திருக்கிறது.

வணிகத்தின் ஆதி சத்தம் எதிரொலித்த இடத்தில் இந்த ஸ்டார்ட்அப் திருவிழா நடக்கிறது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு எனும் சிந்தனை நம்மை வழிநடத்தும் சிந்தனை. செய்யும் தொழிலே தெய்வம் என்று தொழிலை உச்சத்தில் வைத்த மரபு நமக்கிருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடக்கிறது. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களை விட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் இந்த சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் பெரும்பங்காற்றுகிறது.

இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 8 சதவீதம் ஜிபிடியிலும், ஏற்றுமதியில் 40 சதவீதமும், உள்நாட்டு தொழில் உற்பத்தியில் 45 சதவீதமும் பங்களிக்கிறது. உள்நாட்டில் 12 கோடி பேருக்கு வேலை கொடுக்கிறது. அந்த வகையில் சிறுகுறு நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. தமிழக அரசும் சிறுகுறு நடுத்தர தொழில்களை ஊக்குவித்து வருகிறது. உலகத்தின் ஓட்டத்திற்கு இணையாக ஓடும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசும் வணிகத் துறை சார்பில் ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.