உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை தமிழக பாஜக மூத்த நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார், இந்த அமைச்சரவை மாற்றம் திமுகவிற்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. முதல்வர் ஸ்டாலினும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என சூசகமாக கூறி வந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும், பட்டும் படாமல் பேசி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பதவி ஏற்க உள்ளார். தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியாகி உள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பால்வளத்துறை அமைச்சராக மேலும் பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்முடி உள்ளிட்ட ஆறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை எடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பதவி ஏற்கின்றனர். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சி முடியாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் தனது தந்தைக்கு பிறகு தான், தனக்கு பிறகு தனது மகன், என உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதன் மூலம் திமுக பேசும் சமூக நீதி எங்கே சென்றது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் இப்படி ஒரு அமைச்சரவை மாற்றம் தேவைதானா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் புகாரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக சிறையில் இருந்து தற்போது பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்குவது மூலம் ஊழல் எல்லாம் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என திமுக சொல்கிறதா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சரவையில் நடந்துள்ள இந்த மாற்றம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது உள்ளிட்டவை திமுக கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என அடிக்க வைத்து, அடிக்க வைத்து, பழுக்க வைத்து விட்டார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் நக்கல் அடித்துள்ளார். அமைச்சர்கள் ஜால்ரா போட்டதாலயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.