என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்!

“என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பதவியேற்கின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதோடு, அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை முதல்வர் என்பது பதவி அல்ல, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது பணியை செய்து வருகிறேன். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்” என்று கூறினார்.

பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்குச் சென்று அங்கே அவருடைய உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றார். தொடர்ந்து சிஐடி காலனி இல்லத்துக்குச் சென்று தனது அத்தை கனிமொழியையும் சந்தித்து ஆசி பெற்றார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார் – அண்ணா – கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.