ஈரப்பதம் அதிகளவில் இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
காவிரியில் கர்நாடகா கடந்த ஆண்டு உரிய அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க முடியவில்லை. ஆனால், ஜூலை மாதத்திற்குப் பிறகு கனமழை பெய்ததால் கர்நாடகா சுமார் 200 டிஎம்சி தண்ணீர் வரை தமிழகத்திற்கு திறந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக டெல்டாவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குறுவை சாகுபடி நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தஞ்சை உட்பட காவிரி டெல்டா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை சாகுபடியின் அறுவடைக்கான பணிகள் அண்மையில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
கடந்த ஒரு சில தினங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் கன மழை பெய்து வருவதை சுட்டிய தினகரன், “நிர்ணயிக்கப்பட்ட 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஈரப்பதம் இருப்பதாக கூறி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்” என்று கூறினார்.
தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி மற்றும் அறுவடை காலத்தில் மழை பெய்வது தொடர்கதையாகி வரும் நிலையில், ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நெல் ஈரப்பதத்தை குறைக்க கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் விவரித்தார்.
மேலும், “காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்முதல் செய்யப்படும் ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.