தமிழகத்தில் 9 மாதத்தில் 1.33 லட்சம் கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 9 மாதத்தில் ரூ.10.87 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 32,890 கிலோ குட்கா உள்ளிட்டபோதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்திய தோல் ஏற்றுமதி கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து சென்னை தீவுத்திடல் அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு நடத்திய போதை பொருள் இல்லாத சமூகத்துக்கான விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்திய தோல் ஏற்றுமதி கழக தலைவர் ராஜேந்திர குமார் ஜலான், நிர்வாக இயக்குநர் செல்வம், காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போதை பொருள் இல்லாத சமூகத்துக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 கிமீ, 5 கிமீ, 3 கிமீ என்கின்ற தூரங்களுக்கான மாரத்தான் போட்டியில் சுமார் 10,000 பேர் பங்கேற்றனர். நிக்கோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்களுக்கு தடையினை தமிழக அரசு 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்களுடன் 391 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கடந்த15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 3 லடசத்து 6,157 கடைகள், குடோன்கள் மற்றும் வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த 19,822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10.87 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 32,890 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கி பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூர்த்தி செய்துள்ளார். துணை முதல்வராக அறிவிப்பதற்கு முன்பாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலகளவில் தமிழகத்தை விளையாட்டுத்துறை தலைமையகமாகவே மாற்றியுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறையும் தன்வசம் வைத்திருந்த காரணத்தினால், தமிழகம் முழுவதிலும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு உறுதுணையாகவும், திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை ஆய்வு செய்திடும் வகையிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.