நிர்மலா சீதாராமனுக்கு எதிரான தேர்தல் பத்திர வழக்கில் விசாரணைக்கு தடை!

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க இடைக்கால கடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நன்கொடைகளை வழங்கத் தேர்தல் பத்திரங்கள் முறையைக் கொண்டு வந்தது. கறுப்புப் பணத்தை அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெறுவதைத் தடுக்க இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. அதேநேரம் இந்த தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பலரும் விமர்சித்தனர். மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திர வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதை ரத்து செய்து உத்தரவிட்டது. இது மிக முக்கியமான உத்தரவாகப் பார்க்கப்பட்டது. இது மட்டுமின்றி தேர்தல் பத்திரங்கள் குறித்து எந்தக் கட்சிக்கு எப்போது நன்கொடை வழங்கப்பட்டன என்பது குறித்த தகவல்களையும் பொதுவெளியில் வெளியிட உத்தரவிட்டது. அந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பாஜக முறைகேடு செய்துள்ளதாகவும் நிறுவனங்களை மிரட்டி பண வசூல் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக பாஜக தலைவர்கள் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக். 10ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையே நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கத் தடை கோரி பாஜக மாநில முன்னாள் தலைவர் நளீன் குமார் கட்டீல் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க அக். 22ம் தேதி வரை தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி எம் நாகபிரசன்னா கூறுகையில், “புகார்தாரர் ஐபிசியின் 384-வது பிரிவின் (பணம் பறிப்பிற்கான தண்டனை) கீழ் வழக்குப்பதிவு செய்ய விரும்பினால்.. அவர் பிரிவு 383இன் கீழ் பாதிக்கப்பட்டு இது குறித்த தகவலை அறிந்த நபராக இருக்க வேண்டும். ஆனால், அவர் பாதிக்கப்பட்ட நபராக இல்லை” என்றார்.

ஜன அதிகார சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) என்ற அமைப்பின் இணைத் தலைவரான ஆதர்ஷ் ஆர் ஐயர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அவர் ஐபிசி பிரிவுகள் 120 (பி) மற்றும் 384இன் கீழ் குற்றவியல் சதி மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப் போட்டிருந்தார். இந்த பிரிவில் நீதிமன்றத்தை அணுகும் நபர் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதைக் குறிப்பிட்ட கர்நாடக ஐகோர்ட், அப்படி இல்லாத சூழலில் விசாரணையை அனுமதிப்பது சட்டத்தின் செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்யும் செயல் என்றும் கூறியுள்ளது.